×

நாகையில் இருந்து சென்னைக்கு புல் மப்பில் அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் சஸ்பெண்ட்: 55 பயணிகள் தப்பினர்

காரைக்கால்: நாகையில் இருந்து சென்னைக்கு மதுபோதையில் அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சரியான நேரத்தில் புகார் அளித்ததால் 55 பயணிகள் தப்பினர். நாகப்பட்டினத்தில் இருந்து காரைக்கால் வழியாக சென்னைக்கு தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தினசரி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு இந்த பஸ், நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டது. இந்த பஸ்சில் 55 பயணிகள் இருந்தனர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த செல்வராஜ் (58) என்பவர் டிரைவராக இருந்தார். அப்போது நாகூர் அருகே பஸ் வந்தபோது, ஆட்டோ மீது மோதுவது போல் சென்று, சாலையின் குறுக்கே வைத்திருந்த தடுப்பு மீது மோதியது. இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அச்சமடைந்தனர். பின்னர் காரைக்கால் புதியபேருந்து நிலையம் வந்ததும், பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் அலறியடித்து கொண்டு கீழே இறங்கினர்.

இதுதொடர்பாக பயணிகள், காரைக்கால் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் போக்குவரத்து சப்இன்ஸ்பெக்டர் ராஜராஜன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் டிரைவர் செல்வராஜ், மதுபோதையில் பஸ்சை ஓட்டி வந்தது தெரிய வந்தது. பின்னர் செல்வராஜூவிடம் ஆல்கஹால் செக்கிங் மிஷின் மூலம் குடித்த மதுவின் அளவை பரிசோதனை மேற்கொண்டார். இதில் ஆல்கஹாலின் அளவு 274.2 என இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நாகப்பட்டினம் டிப்போ அதிகாரிகளிடம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜராஜன் பேசி மாற்று பஸ் ஏற்பாடு செய்தார். இதனையடுத்து பயணிகள் அனைவரும் பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து காரைக்கால் நகர போக்குவரத்து காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் காரைக்கால் நீதிமன்றத்தில் டிரைவர் செல்வராஜ் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இதனிடையே கும்பகோணம் கோட்ட அரசு விரைவு போக்குவரத்து முதன்மை மேலாளர் பரிந்துரையின் பேரில், நாகை கோட்ட அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை மேலாளர், ஓட்டுனர் செல்வராஜை ஒரு மாதம் சஸ்பென்ட் செய்து நேற்று இரவு அதிரடியாக உத்தரவிட்டார். ஒரு மாதத்திற்கு பிறகு போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெறவும் அறிவுறுத்தியுள்ளார். டிரைவர் செல்வராஜ் இன்னும் 6மாதத்தில் பணி ஓய்வு பெற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 300 கி.மீ தூரம் பயணம் செல்லும் பஸ்சை பயணிகளுடன் போதையில் டிரைவர் ஓட்டிய சம்பவம் காரைக்கால் பகுதியி்ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post நாகையில் இருந்து சென்னைக்கு புல் மப்பில் அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் சஸ்பெண்ட்: 55 பயணிகள் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Nagai ,Chennai ,Karaikal ,
× RELATED நாகை தொகுதி எம்.பி. செல்வராஜ்...